பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம் உல் ஹக் நியமனத்திற்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்
ஒரு மாதமாக காலியாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு, முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளராக இருந்த இன்சமாம் உல் ஹக், அணிக்கு ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முன்னதாக மீண்டும் தலைமை பொறுப்புக்கு வருகிறார். ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கும் இலங்கையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை அறிவிப்பது அவரது முதல் பணியாகும். அதைத் தொடர்ந்து ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணித்தேர்வில் ஈடுபட உள்ளார். முன்னதாக, கடந்த 2019 உலகக்கோப்பைக்கான அணியையும் இன்சமாம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.