சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025: வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி முதல் சீசனில் பட்டத்தை வென்றது இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
ராய்ப்பூர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று இந்திய கிரிக்கெட் அணி பட்டம் வென்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் தலைமையில் விளையாடியது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கிய நிலையில், டுவைன் ஸ்மித் (45 ரன்கள்) மற்றும் லெண்டில் சிம்மன்ஸ் (57 ரன்கள்) தவிர மற்றவர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
149 ரன்கள் இலக்கு
இந்திய அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்கு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வினய் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஷாபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டின் முதல் சீசன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கரால் உருவாக்கப்பட்ட ஒரு தனியார் டி20 லீக் தொடராகும்.