INDvsNZ Semifinal : சச்சினின் மூன்று சாதனைகளை முறியடிக்க தயாராகும் விராட் கோலி
தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் இதுவரை நடந்து முடிந்த ஒன்பது லீக் போட்டிகளில் 99 சராசரி மற்றும் 88.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 594 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். ஒரு இன்னிங்சில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 103 ரன்கள் ஆகும். மேலும், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடைசி ஐந்து போட்டிகளில், விராட் கோலி 83.75 சராசரியுடன் 87.24 ஸ்ட்ரைக் ரேட்டில் 335 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியின்போது சச்சின் டெண்டுல்கரின் மூன்று சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலி முறியடிக்க தயாராகும் சச்சினின் சாதனைகள்
சமீபத்தில், நடந்து வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த பிறகு, சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார். இந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சதம் அடித்தால், டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு, ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி பெறுவார். இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பையின் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த சாதனையையும் டெண்டுல்கர் பெற்றுள்ளார். அவர் 2003 சீசனில் 673 ரன்கள் எடுத்தார். விராட் கோலி தற்போது 594 ரன்களுடன் உள்ள நிலையில், இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதையும் முறியடிக்கலாம்.
ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிகமுறை 50+ ரன்கள்
கடந்த வாரம் நெதர்லாந்திற்கு எதிராக 51 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரே உலகக்கோப்பையில் அதிக ஐம்பதுக்கு மேற்பட்ட ஸ்கோர்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரின் கூட்டு சாதனையை கோலி சமன் செய்தார். மூவரும் தற்போது தலா 6, 50+ ஸ்கோர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் அடிப்பதன் மூலம், விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிப்பார். விராட் கோலி தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதால், இந்த போட்டியில் மூன்று சாதனைகளையும் ஒன்றாக படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.