INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா?
செய்தி முன்னோட்டம்
புனேயில் நடைபெற்று வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
ஆரம்பத்தில் வலுவாக நின்று விளையாடினாலும், வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி முதல் நாளிலேயே 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின் இதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மொத்தமுள்ள 10 விக்கெட்டுகளையும், இந்தியாவின் ஆஃப் ஸ்பின்னர்களே எடுத்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா, இரண்டாவது நாளில் 156 ரன்களுக்கு சுருண்டது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா அபார பந்துவீசசு
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய கிரிக்கெட் அணியை விட 103 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்ஸை நியூசிலாந்து தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டனுமான டாம் லாதம் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் சேர்த்த்தாலும், மற்ற வீரர்கள் கைகொடுக்காததால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் 255 ரன்களுக்கு சுருண்டது.
வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வாழ்த்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 359 ரன்கள் இலக்குடன் இந்தியா களமிறங்கி ஆடி வருகிறது. இந்தியா இதில் வென்றால், உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேஸிங்கில் இரண்டாவது பெரிய வெற்றியாகவும், நியூசிலாந்துக்கு எதிராக முதல் பெரிய வெற்றியாகவும் அமையும்.