சதத்தை விடுங்க; ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனையை முறியடிச்சிட்டாராமே சஞ்சு சாம்சன்!
சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs வங்காளதேசம் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 111 ரன்களை எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 35 பந்துகளில் சதம் அடித்த ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக 40 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இந்த சாதனையை அவர் முறியடிக்கவில்லை என்றாலும், கேப்டன் ரோஹித்தின் மற்றொரு டி20 சாதனை ஒன்றை அவர் முறியடித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிராக அதிவேக அரைசதம்
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். சஞ்சு சாம்சன் தனது முதல் 50 ரன்களை வெறும் 22 பந்துகளில் எட்டினார். இதற்கு முன்னர், 2019இல், ரோஹித் ஷர்மா 23 பந்திகளில் 50 ரன்களை எட்டியதே, வங்கதேசத்திற்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிவேக அரைசதமாக இருந்தது. இதற்கிடையே, இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது . சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும் ஹர்திக் பாண்டியா 47 ரன்களும் எடுத்தனர். அடுத்து பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.