37வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடக்க டெஸ்டின் கடைசி இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
தனது 101வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வின் தற்போது மொத்தமாக 520 விக்கெட்களை எட்டியுள்ளார்.
இதன் மூலம் அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜாம்பவான் கர்ட்னி வால்ஷை (519) கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் ஆனார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வினை விட அதிகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்த ஒரே வீரராக அனில் கும்ப்ளே (619) உள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள்
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி இன்னிங்ஸில் மூன்றாவது விக்கெட்டை எடுத்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 176 விக்கெட்டுகளுடன் பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அஸ்வின் தற்போது 178 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 175 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 147 விக்கெட்களுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 134 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.