இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் நீக்கம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடியாக, அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான இறுதித் தயாரிப்புகளாக செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் இருவரும் தங்களது முந்தைய காயங்களில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும், வெள்ளிக்கிழமை மொஹாலியின் பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள் என்றும் உறுதிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்கா தொடரையும் தவறவிட்ட மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க்
கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இடம் பெறவில்லை. ஸ்டீவ் ஸ்மித்தும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில், அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவார் என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அணியின் விளையாடும் லெவனில் இடம்பெறுவர் என்பதையும் பாட் கம்மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் இல்லாவிட்டாலும், தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் வலுவான விளையாடும் லெவனை களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.