INDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்குநேர் புள்ளிவிபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், ஆஸ்திரேலியா அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்நிலையில், கடந்த காலங்களில் இரு அணிகளும் ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் புள்ளிவிபரங்களை இதில் பார்க்கலாம்.
இந்தியாவை அதிக போட்டிகளில் வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையில் இதற்கு முன்னர் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 8 போட்டிகளிலும், இந்தியா 5 போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில், ஒப்பீட்டளவில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் முதல்முறையாக 1983 உலகக்கோப்பையில் மோதின. அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் கடைசியாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியதில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நாக் அவுட் போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.