INDvsAUS Final : ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்கார்களில் ஒருவரான ஷுப்மன் கில் வெறும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி ரன் குவித்தாலும், அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.
விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம்
இந்திய கிரிக்கெட் அணி பவர்பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற நிலைமை மோசமானது. எனினும், நிதானமாக விளையாடிய விராட் கோலி 54 ரன்களும், கேஎல் ராகுல் 66 ரன்களும் எடுத்து அணியை மீட்டனர். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் வெளியேறிய பிறகு அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.