INDvsAUS T20I : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்
இந்த போட்டிக்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை மொத்தம் 226 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 135 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நடப்பு தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் டி20 வரலாற்றில் இந்தியா தனது 135வது வெற்றியை எட்டியுள்ளது. இதன்மூலம், அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. அடுத்த டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.