"எங்கள் கதையில் ஒரு புதிய அத்தியாயம்": தாயாகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், கணவர் சோம்வீர் ரத்தீயுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற வினேஷ், சோம்வீர் ரதீயை 2018 இல் திருமணம் செய்து கொண்டார்.
வியாழக்கிழமை தனது பதிவில், வினேஷ் தனது மற்றும் அவரது கணவரின் புகைப்படத்தை ஒரு தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
30 வயதான அவர், தங்கள் காதல் கதை தொடர்வதாகவும், அதில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தலைப்பில் ஒரு கால் மற்றும் இதய ஈமோஜியும் இடம்பெற்றிருந்தது.
ரசிகர்களும், சக விளையாட்டு வீரர்களும், வினேஷ் மற்றும் ரதீக்கு இன்ஸ்டாகிராமில் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
வாழ்க்கை
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பின்னர் வினேஷ் போகட்டின் வாழ்க்கை
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்று வினேஷ் வரலாறு படைத்தார்.
இருப்பினும், இறுதிப் போட்டியின் நாளன்று அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டு முழுப் போட்டியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
அதன் தொடர்ச்சியாக அவர் தனது தொழில் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகக் கூறினார்.
பின்னர் தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அவர், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.