2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் கால்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, இந்திய அணி தனது முதல் போட்டியில் முன்னாள் உலகக்கோப்பை சாம்பியன் ஜப்பானிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) வியட்நாமை எதிர்கொண்டது. இதில், போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வியட்நாம் அணியின் ஹுய்ன்ஹு 4வது நிமிடத்திலேயே கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து, டிரான் தி ஹை லின் 22வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் வியட்நாம் 2-0 என முன்னிலையில் இருந்தது.
இந்தியா சார்பாக கோல் அடித்த தமிழகத்தை சேர்ந்த சந்தியா ரங்கநாதன்
முதல் பாதியை தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த பாம் ஹை யென் ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கோல் அடித்து வியட்நாம் அணிக்கு கூடுதலாக ஒரு கோலை பெற்றுக் கொடுத்தார். இந்திய அணி கடைசி வரை கோல் அடிக்க தடுமாறிய நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன் இந்தியாவுக்காக 80வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கடைசி வரை கோல் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியா வியட்நாமிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்தியாவுக்கு இன்னும் ஒரு குழுநிலை ஆட்டம் மீதமிருந்தாலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இதன் மூலம் இழந்துள்ளது.