ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி
பாரிஸில் நடந்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி புதிய சாதனை படைத்துள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி "பி" பிரிவு குழு ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 12வது நிமிடத்தில் ஸ்டிரைக்கர் அபிஷேக் மூலம் முதல் கோல் அடித்தது. அடுத்த நிமிடத்திலேயே கேப்டன் ஹர்மன்பிரீத் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். 25வது நிமிடத்தில் இந்திய கோல் கீப்பர் எஸ் ஸ்ரீஜேஷ் கவனக் குறைவால் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தாலும், முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
குழு ஆட்டத்தில் மூன்றாவது வெற்றியை உறுதி செய்தது இந்திய அணி
இரண்டாம் பாதியிலும் ஆக்ரோஷமாக இந்திய வீரர்கள் விளையாடிய நிலையில், 32வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் பெனால்டி ஸ்ட்ரோக்கை அடித்து கோலாக மாற்ற 3-1 என முன்னிலையை தக்கவைத்தது இந்தியா. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவால் கோல் அடிக்க முடியாமல் போகவே, இறுதியில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா குழு ஆட்டத்தில் பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். காலிறுதி வாய்ப்பை இந்தியா ஏற்கனவே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வெற்றியின் மூலம், 1972 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு, முதல்முறையாக 52 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.