கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர். புச்சி பாபு அழைப்பிதழ் போட்டிக்காக வீரர்கள் கோவையில் முகாமிட்டிருந்த நிலையில், இளம் புற்றுநோயாளிகளுடன் நேரத்தை செலவிட முடிவு செய்து அங்கு சென்றனர். கிரிக்கெட் வீரர்கள் குழந்தைகளுடன் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டனர். மினி கிரிக்கெட் பேட்களில் கையெழுத்திட்டனர் மற்றும் அவர்களுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்களை பரிசாக வழங்கினர். குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் வார்டில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் குணமடைய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மருத்துவமனை இயக்குனருடன் சிகிச்சை நெறிமுறைகளைப் பற்றி விவாதித்த சூர்யகுமார் யாதவ்
வார்டில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் கால அளவு குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி அண்ட் ரிசர்ச் இயக்குனர் டாக்டர் பி. குஹனுடன் சூர்யகுமார் விரிவாக விவாதித்தார். 2005ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமால் இந்த வார்டு திறக்கப்பட்டதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலவச புற்றுநோய் சிகிச்சையைப் பெற்றுள்ளனர் என்று கூறிய டாக்டர் குஹன், தற்போதைய சிகிச்சைகள் மற்றும் அவற்றின் முடிவுகளைப் பற்றி சூர்யகுமாருக்கு விளக்கினார். புற்றுநோயியல் துறையின் அர்ப்பணிப்பையும், இந்த உன்னத நோக்கத்திற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வழங்கிய குறிப்பிடத்தக்க ஆதரவையும் சூர்யகுமார் யாதவ் பாராட்டினார்.