INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா
அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள். இன்றைய டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஆகியோர் சதம் கடந்தனர். மேலும், கே.எல்.ராகுலின் அரைசதம் மற்றும் சூர்யகுமார் யாதவ்வின் பட்டாசான 70 ரன்களுடன், 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்து, ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
ஆஸ்திரேலியாவின் சொதப்பல் பேட்டிங்:
இன்று போட்டி நடைபெறும் இந்தூர் ஆடுகளமானது, பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும், இடைப்பட்ட ஓவர்களில் ஸ்பின்னுக்கு சற்று ஒத்துழைக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தைப் போலவே, ஆஸ்திரேலிய பௌலர்களால் இந்திய பேட்டர்களுக்கு எந்த வித சிரமத்தையும் கொடுக்க முடியவில்லை. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ருத்துராஜ் கெயிக்வாட்டைத் தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். அதேபோல், ஆஸ்திரேலிய பேட்டர்களும் சுலபமாக ரன்களை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த ஆஸ்திரேலிய பேட்டருமே இந்த ஆடுகளத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. மேட் ஷார்ட் 9 ரன்களிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் பந்திலும், ஜாஸ் இங்கிலிஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
மழையால் தடைப்பட்ட ஆட்டம்:
இந்திய அணியின் பேட்டிங்கின் போதே, முதல் இன்னிங்ஸில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. அதே போல, ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது இரண்டாவது இன்னிங்ஸிலும் மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட, DLS முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 50 ஓவர்களில் 400 ரன்களாக இருந்த இலக்க, மழைக்குப் பின்பு ஆட்டம் துவங்கிய போது, 33 ஓவர்களில் 317 ரன்கள் என குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் மட்டுமே 135 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 53 ரன்களைக் குவித்திருந்தார். மற்ற ஆஸ்திரேலிய பேட்டர்கள் யாருமே சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு, ஆஸ்திரேலிய பௌலர் சீன் அபாட் சற்று நன்றாக விளையாடி ஆஸ்திரேலியாவிற்கு சிறிது நம்பிக்கை அளித்தார்.
இந்தியா அசத்தல் பௌலிங்:
பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி சொதப்ப, பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. இரண்டாவது ஓவரிலேயே மேட் ஷார்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார் பிரசித் கிருஷ்ணா. இடையில் சிறிய பார்ட்னர்ஷிப்பை ஆஸ்திரேலியா கட்டமைத்துக் கொண்டிருந்த வேளையில், சீரிய இடைவெளியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினர் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும். இறுதியில் 28.2 ஓவர்களுக்குள்ளாகவே 217 ரன்களுக்கு ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா. இத்துடன் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை இழந்தது ஆஸ்திரேலிய அணி. தொடரின் முதலிரண்டு போட்டிகளை வென்று தொடரை வென்றது இந்தியா.