ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஸ்குவாஷ் விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று டென்னிஸ் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றிய நிலையில், தற்போது மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. ஸ்குவாஷ் விளையாட்டில் இந்திய ஆடவர் அணியானது 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறது. மகேஷ் மங்காவ்கர், சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் ஸ்குவாஷ் அணியை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டது. முதலில் விளையாடிய மங்காவ்கர் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவ, சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகிய இருவரும் வெற்றி பெற்று இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.