இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : முந்தைய போட்டிகளின் நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை (டிச.26) செஞ்சூரியனில் தொடங்க உள்ளது. இதன் மூலம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறது. முன்னதாக, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியா சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை 1-1 என சமன் செய்ததோடு, கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்புடன் உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு விளையாடும் முதல் தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிராக 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 17 வெற்றிகளுடன் சற்றே முன்னிலை வகிக்கிறது. இந்தியா 15 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், 10 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் இந்தியா வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது அணிக்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.