இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா மோத உள்ளன. ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறிய பிறகு தென்னாப்பிரிக்கா விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். மறுபுறம், இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும், அதன் பின்னர் அதே ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வென்று நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக ஐடென் மார்க்ரம் செயல்பட உள்ள நிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் மோதல் இந்த மைதானத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியே வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தில் இந்தியா மொத்தம் 5 டி20 போட்டிகளில் விளையாடிய நிலையில், அதில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் முடிவில்லை. இந்த ஐந்து போட்டிகளும் 2007 முதல் டி20 உலகக்கோப்பையில் விளையாடப்பட்டவை ஆகும். இதற்கிடையே, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 24 போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா 13 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 10 போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவில்லை.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி. இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா/வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி நடைபெறும் இடம், நேரம் மற்றும் நேரடி ஒளிபரப்பு விபரங்கள்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டியை நேரலையில் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷனிலும் போட்டி ஒளிபரப்பப்பட உள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், அதற்கான அணியை கட்டமைக்கும் வகையில், இரு தரப்பிலும் இளம் வீரர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.