இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 116 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 116 ரன்களுக்கு சுருட்டியது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால், ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் டக்கவுட் ஆகி வெளியேறினர். டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடென் மார்க்ரம் நிலைத்து நிற்க முயற்சி செய்தாலும், 28 ரன்கள் எடுத்த நிலையில் டோனி டி ஸோர்ஸி அவுட்டானார்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் அபார பந்துவீச்சு
இந்திய கிரிக்கெட் அணியின் அர்ஷ்தீப் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் அவுட்டான நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களில் அந்த அணி தத்தளித்தது. அதன் பின்னர் அண்டில் பெஹ்லுக்வாயோ 33 ரன்களும் தப்ரைஸ் ஷம்சி 11 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை மூன்று இலக்கத்திற்கு உயர்த்தினர். இதற்கிடையே மேலும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது முதல் ஐந்து விக்கெட்டுகளாகும்.