LOADING...
INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: கை கொடுப்பார்களா வீரர்கள்? சூர்யகுமார் யாதவின் மர்மமான பதில்
INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: கை கொடுப்பார்களா என்ற கேள்விக்கு சூர்யகுமார் யாதவின் பதில்

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: கை கொடுப்பார்களா வீரர்கள்? சூர்யகுமார் யாதவின் மர்மமான பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 14, 2026
07:21 pm

செய்தி முன்னோட்டம்

நாளை, பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை, கொழும்புவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கைகொடுப்பார்களா என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த 2025 ஆசியக் கோப்பையின் போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

பதில்

சூர்யகுமார் யாதவின் சாமர்த்தியமான பதில்

போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், நாளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணி கைகொடுக்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிகவும் கவனமாகப் பதிலளித்தார். "இதற்கு இன்னும் 24 மணிநேரம் பொறுத்திருக்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகத் தூங்குங்கள், நாளை என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்." என்று புன்னகையுடன் கூறி, தனது முடிவை ரகசியமாக வைத்துள்ளார். இது இந்திய வீரர்கள் தங்கள் முந்தைய முடிவை (கை குலுக்கத் தவிர்ப்பது) தொடர்வார்களா அல்லது விளையாட்டு உணர்வை வெளிப்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அபிஷேக் ஷர்மா

அபிஷேக் ஷர்மா விளையாடுவது உறுதி

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்தியா தனது முழு பலத்துடன் விளையாட வேண்டும் என்றும், காயமடைந்திருந்த அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா களமிறங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யகுமார், "பாகிஸ்தான் கேப்டனே அபிஷேக் விளையாட வேண்டும் என்று விரும்பினால், அப்படியே ஆகட்டும். அவர் நாளை கண்டிப்பாக விளையாடுவார்" என்று கூறி, அபிஷேக் ஷர்மாவின் வருகையை உறுதிப்படுத்தினார்.

Advertisement

சாதகம்

பாகிஸ்தானுக்கு உள்ள சாதகம்

கொழும்பு மைதானத்தின் சூழல் குறித்துப் பேசிய சூர்யகுமார், பாகிஸ்தான் அணி ஏற்கனவே இங்குப் போட்டிகளில் விளையாடி வருவதால் அவர்களுக்கு ஆடுகளம் குறித்து சிறிய சாதகம் இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்திய அணி மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது சொந்தத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாகவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைகுலுக்கத் தவிர்த்ததாக கிரிக்கெட் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாளை மைதானத்தில் இந்த நிலை மாறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement