INDvsNZ 3வது டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா (5 விக்கெட்டுகள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (4 விக்கெட்டுகள்) சுழலில் சிக்கிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
263 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் மட்டும் போராடி அரைசதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களுடன் களத்தில் உள்ளது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முன்னதாக, முதல் 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இந்தியா, இதில் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.