இருநாடுகளின் 75 ஆண்டு கால உறவை அமைக்கும் வரலாற்றுப் போட்டி! இந்தியாvsஜப்பான் சுஸூகி கப் T20 அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் வரலாற்றுப் பூர்வமாக முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி ஆகிய இரு தலைவர்களால் அறிவிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் 75 என்ற இருதரப்பு விளையாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இருநாடுகளின் 75 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
சுஸூகி கப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி
சுஸூகி கப் என்ற பெயரில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோட்டமாக அமையும் இப்போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் காலிறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜப்பான் மண்ணில் விளையாடும் இந்த முதல் போட்டி சிறந்த அனுபவத்தையும், கிழக்காசிய நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டைப் பிரபலப்படுத்தப் புதிய வாய்ப்பையும் வழங்கும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
ஜப்பான்
ஜப்பான் கிரிக்கெட் வரலாறு மற்றும் அணிகளின் விவரம்
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியுடன் ஜப்பான் ஆண்கள் அணி மோதுவது இதுவே முதன்முறையாகும்.
இப்போட்டிக்காக சானோ மைதானத்தின் பார்வையாளர்கள் கொள்ளளவு 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 அன்று இருநாடுகளின் பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய பிறகு, நான்கு நாட்கள் கழித்து ஆண்கள் அணிகள் மோதவுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா உள்ளிட்ட அதே முதன்மை இந்திய அணியே இப்போட்டியிலும் களம் இறங்கவுள்ளது.
வரவேற்பு
பிசிசிஐ மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வரவேற்பு
இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி ஆசிய நாடுகளில் கிரிக்கெட்டை வளர்ப்பது பிசிசிஐயின் கடமை என்று கூறினார்.
ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் நவோகி மியாஜி பேசுகையில், உலக சாம்பியனான இந்திய அணியைத் தங்களது நாட்டில் வரவேற்பது ஜப்பான் கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான மைல்கல் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
இப்போட்டி ஜப்பான் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.