LOADING...
இந்தியா vs வங்கதேசம் U19 உலகக்கோப்பை: டாஸின் போது கேப்டன்கள் கைகுலுக்க மறுப்பு; பின்னணி என்ன?
இந்தியா vs வங்கதேசம் U19 உலகக்கோப்பை டாஸின் போது கேப்டன்கள் கைகுலுக்க மறுப்பு

இந்தியா vs வங்கதேசம் U19 உலகக்கோப்பை: டாஸின் போது கேப்டன்கள் கைகுலுக்க மறுப்பு; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2026
04:58 pm

செய்தி முன்னோட்டம்

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் போடப்பட்ட போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் வங்கதேச துணை கேப்டன் ஜவாத் அப்ரார் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமலேயே அங்கிருந்து சென்றனர். கிரிக்கெட் மைதானத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தார்மீக மரபு மீறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிசி

நோ ஹேண்ட்ஷேக் (No Handshake) பாலிசி

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த அதிரடி முடிவு தற்செயலானது அல்ல. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இருக்க இந்திய அணி ஒரு கொள்கையை (No-Handshake Policy) முடிவெடுத்திருந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, தற்போது பங்களாதேஷ் அணிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாகப் பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

காரணங்கள்

பின்னணியில் உள்ள காரணங்கள்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான உறவு சமீபத்திய மாதங்களில் பலத்த சவால்களைச் சந்தித்து வருகிறது. பங்களாதேஷில் நிலவும் வன்முறைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஒருவிதக் கசப்புணர்வு நிலவுகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் இருந்து பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டது மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசியை அணுகியது போன்ற கிரிக்கெட் தொடர்பான நிர்வாகச் சிக்கல்களும் இந்தப் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Advertisement

அரசியல்

விளையாட்டில் ஊடுருவும் அரசியல்

விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் ஒரு பாலமாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது நிலவும் சூழல் அதற்கு எதிராக உள்ளது. ஆசியக் கோப்பை மற்றும் மகளிர் உலகக்கோப்பையிலும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் இதே போன்ற ஒரு நிலையை எடுத்திருந்தார். இப்போது இளையோர் உலகக்கோப்பையிலும் இது எதிரொலித்துள்ளது. டாஸின் போது இரு கேப்டன்களும் பேசிக்கொண்டாலும், கைகுலுக்காமல் தவிர்த்தது மற்றும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தது, மைதானத்திற்கு அப்பால் உள்ள பதற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement