இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது. முன்னதாக, டாஸ் வென்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட்63 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
ரிச்சா கோஷ் ஆட்டம் வீண்
259 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா (14) மற்றும் ஸ்மிருதி மந்தனா (34) விரைவில் அவுட்டாகி வெளியேறினர். எனினும், ரிச்சா கோஷ் நிலைத்து நின்று 96 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிகஸ் 44 ரன்கள் எடுத்தார். அதன் பின் வந்தவர்களில் தீப்தி ஷர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 24 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்ததால், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என தொடரை இழந்துள்ளது.