இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. பெங்களூரில் உள்ள எம்.சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நான்காவது போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இதுவரை 30 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்திய அணி அதிக வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி 18 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் முடிவில்லாமல் முடிந்துள்ளது. மேலும், இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 14 டி20 போட்டிகளில் இந்திய மைதானங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 14 போட்டிகளில், இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது.
எம்.சின்னச்சாமி ஸ்டேடியம் நிலவரம்
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இந்தியா இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக தலா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தலா ஒரு போட்டியிலும் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ஒரே ஒரு போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள நிலையில், அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் இடம், நேரம், ஒளிபரப்பு விவரங்கள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள எம்.சின்னச்சாமி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி டிசம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்க உள்ளது. ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோ சினிமாவின் ஆப் மற்றும் இணையதளத்திலும் போட்டியை நேரில் பார்க்கலாம்.
விளையாடும் லெவனில் மாற்றங்களை செய்ய இரு அணிகளும் திட்டம்
முன்னதாக, நான்காவது டி20க்கு இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் நான்கு மாற்றங்களைச் செய்தது. மேலும், தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இறுதி ஆட்டத்தில் இன்னும் சிலமாற்றங்களை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அக்சர் அல்லது பிஷ்னோய்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதே நேரத்தில் பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் 13 வீரர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால், நிறைய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பு இல்லை. சங்காவுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அல்லது நாதன் எல்லிஸ் ஆகியோரில் ஒருவரைக் கொண்டுவருவது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர்/திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல்/வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்) : ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா /கேன் ரிச்சர்ட்சன்.
பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் என்றாலே அனைவர்க்கும் நினைவுக்கு வருவது ரன் மழைதான். குறுகிய எல்லைகள் மற்றும் ஒரு அமைதியான மேற்பரப்பை இந்த மைதானம் கொண்டுள்ளதுதான் இதற்கு காரணமாகும். இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி டி20 போட்டியில் மற்றொரு ரன் மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஐபிஎல்லில், இங்கு 14 இன்னிங்ஸ்களில் ஒன்பதில் 180 ரன்களுக்கு மேல் ஸ்கோர்கள் எடுக்கப்பட்டன. மேலும் சமீபத்திய ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் கூட ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, போட்டி நடக்கும்போது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றாலும், மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், வெப்பநிலையானது செல்சியஸ் அளவில் 18 முதல் 22 டிகிரி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.