இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : வானிலை அறிக்கை
ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) இந்திய கிரிக்கெட் அணி மோத உள்ளது. அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. மேலும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் குவித்து 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூன்றாவது போட்டி நடக்கும் கவுகாத்தில் உள்ள வானிலை நிலைமையை இதில் பார்க்கலாம்.
கவுகாத்தி வானிலை அறிக்கை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டியின்போது மழையால் எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்யூவெதரின் கணிப்பின்படி, செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தில் தெளிவான வானிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரவு 7.00 மணியளவில் ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இரவு 10.30 மணி அளவில் ஆட்டம் முடியும்போது வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகக் குறையும். இந்த போட்டிக்கு பிறகு நான்காவது டி20 டிசம்பர் 1 ஆம் தேதி ராய்பூரிலும், கடைசி போட்டி டிசம்பர் 3 ஆம் தேதி பெங்களூரிலும் நடைபெற உள்ளது.