Loading...
மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
12:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில், இத்தொடர் மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) வங்கதேச கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) போட்டி அட்டவணை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

சந்தேகம்

உள்நாட்டுத் தொடர் அறிவிப்பால் எழுந்த புதிய சந்தேகங்கள்

செப்டம்பர் தொடக்கத்தில் இந்தியத் தொடர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 9 வரை மிா்பூர் ஷேர் பங்களா மைதானத்தில் கேம் டெவலப்மென்ட் டிரோபி என்ற வயது வரம்பிற்குட்பட்ட உள்நாட்டுத் தொடர் நடைபெறும் என பிசிபி தலைவர் தமீம் இக்பால் அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இந்தியத் தொடரின் தேதிகள் சற்று முன்னும் பின்னுமாக மாற்றப்படலாம்.

போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரை வேறு மைதானத்திற்கு உடனடியாக மாற்ற முடியும்." என விளக்கமளித்தார்.

உறவு மேம்பாடு

இரு வாரியங்களுக்கு இடையே மேம்பட்டு வரும் உறவுகள்

கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி இத்தொடர் முதன்முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டது மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி மறுத்தது போன்ற நிகழ்வுகளால் இரு வாரியங்களுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது.

இருப்பினும், ஜூன் மாதத்தில் தமீம் இக்பால் பிசிபி தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, இரு நாட்டு வாரியங்களுக்கும் இடையிலான உறவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசின் அனுமதி

இந்திய அரசின் இறுதி அனுமதி மட்டுமே பாக்கி

இந்திய அணியின் வங்கதேசப் பயணம் குறித்து இரு வாரியங்களும் இணைந்து புதிய அட்டவணையைத் தயாரித்தாலும், இந்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் இறுதி அனுமதி மிக முக்கியமாகும்.

வங்கதேசத்தின் தற்போதைய பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்த பிறகே இந்திய அரசு தனது முடிவை அறிவிக்கும்.

இருப்பினும், "வங்கதேசம் மிகவும் பாதுகாப்பான நாடு; இந்திய அணி நிச்சயம் வருகை தரும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தமீம் இக்பால் இந்திய வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT