செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அறிவித்தது. இந்த அட்டவணையின்படி, இந்திய அணி 2023-24 சீசனில் உள்நாட்டில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும். இதில் ஐந்து டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் எட்டு டி20 போட்டிகள் அடங்கும். 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் இந்த சீசன் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட் மைதானங்களில் நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலியாவுடன் டி20 தொடரில் விளையாடும் இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன், நவம்பர் 23 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலும், இந்திய அணி உள்நாட்டில் விளையாட உள்ளது. இந்த தொடரின் இந்து போட்டிகளும் நவம்பர் 23, 26, 28, டிசம்பர் 1, 3ல் முறையே விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் (டிசம்பர் 3) மைதானங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் சர்வதேசப் போட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற உள்ளது. ஜனவரி 11 முதல் மூன்று டி20 போட்டிகள் இந்த தொடரில் விளையாடப்பட உள்ளன. இந்த தொடரை முடித்துக்கொண்டு, ஜனவரி 25 முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.