INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து
புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி 255 ரன்களுக்கு அவுட்
103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, போட்டியின் மூன்றாம் நாளான இன்று 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் போராடி 77 ரன்கள் சேர்த்தார். லோயர் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா மட்டும் போராடி 42 ரன்கள் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால், 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றது. இதன்மூலம், நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது. மேலும், இதன்மூலம், 2012க்கு பிறகு 12 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.