பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரவீன் குமார்
2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் தூரம் கடந்து தொடர்ந்து இரண்டாவது பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார். இது பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு ஆறாவது பதக்கமாகும். இந்த பதக்கம் மூலம், இதுவரையிலான பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் அதிக தங்கம் வென்ற தொடராக இந்தியாவுக்கு இது மாறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 21 வயதான தடகள வீரர் பிரவீன், மாரியப்பன் தங்கவேலுவுக்குப் பிறகு, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார். இந்த போட்டியில் அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் கியாசோவ் 2.03 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பிரவீன் குமாரின் பின்னணி
பிரவீனின் பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை. குட்டையான காலுடன் பிறந்த அவர், ஆரம்பத்தில் தனது சகாக்களுடன் ஒப்பிடும்போது தாழ்வு மனப்பான்மையுடன் போராடினார். அவரது பாதுகாப்பின்மையைப் போக்க, அவர் விளையாட்டுக்கு திரும்பினார், நண்பர்களுடன் விளையாடினார் மற்றும் கைப்பந்து மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது, அவரது வாழ்க்கை ஒரு முக்கிய திருப்பத்தை எடுத்தது. பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ், பிரவீன் உயரம் தாண்டுதல் மீது தனது கவனத்தை திருப்பி, தற்போது அனைவரது கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி பிரவீன் குமாரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.