2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி!
2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் உள்ள ஐசிசி, இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் சந்தையை ஒரு காரணமாக கூறியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டிக்கு சமீபத்தில் ஐசிசி அனுப்பிய அறிக்கையில், "கிரிக்கெட் இல்லாமல் இந்தியாவில் இருந்து ஐஓசியின் ஊடக உரிமைகள் வருமானம் 2028 ஒலிம்பிக்கிற்கு அதிகபட்சம் $130 மில்லியனாக உயர வாய்ப்புள்ளது. அதே நேரம் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டால் இது $260 மில்லியனைத் தொடும்." என்று வாதிட்டுள்ளது. இந்திய சந்தைக்கான ஒலிம்பிக் உரிமையை ஜியோ ஆதரவில் இயங்கும் வியாகாம் 18 நிறுவனம் தற்போது $31 மில்லியனுக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் முயற்சிக்கு பிசிசிஐ ஆதரவு
ஐபிஎல் மற்றும் ஐசிசி போட்டிகளுக்கான ஊடக உரிமைகள் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 300% மற்றும் 400% அளவிற்கு உயர்ந்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள ஐசிசி இந்த வாதத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் கிரிக்கெட் மீதான அதன் ஆர்வத்தைப் பயன்படுத்தி ஐசிசி, எப்படியாவது ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்து விட துடித்து வருகிறது. ஆரம்பத்தில் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டாலும், பிசிசிஐ ஆர்வம் காட்டியதால், ஜெய் ஷாவை ஒலிம்பிக் பணிக்குழுவில் சேர்த்து மீண்டும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளது. 2028 ஒலிம்பிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவரும், தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக இருப்பவருமான எரிக் கார்செட்டியை அகமதாபாத்தில் சந்தித்து பேசியுள்ளதால், கிரிக்கெட் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்த காலவரிசையைப் பகிரவும்