INDvsNZ முதல் டெஸ்ட்: 136 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை சமன் செய்தது இந்தியா
முதல் நாள் மழையால் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட பிறகு, பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மாட் ஹென்றி (5 விக்கெட்டுகள்) மற்றும் வில்லியம் ஓ'ரூர்க் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் தாக்குதலில் இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐந்து வீரர்கள் டக்கவுட்
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் 8 வீரர்களில் விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என ஐந்து பேர் டக்கவுட் ஆகினர். இதற்கு முன்னர், 1888ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வெறும் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதுதான் இதேபோல் முதல் எட்டு வீரர்களில் ஐந்து பேர் டக்கவுட் ஆகி இருந்தனர். இந்நிலையில், தற்போது 136 ஆண்டுகள் கழித்து அந்த மோசமான சாதனையை இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்துள்ளது. முன்னதாக, இந்த இன்னிங்ஸில் முதல் 7 வீரர்கள் 4 பேர் டக்கவுட் ஆனதன் மூலம், இது போன்ற மோசமான சாதனையை மூன்றாவது முறையாக இந்திய அணி படைத்தது.