டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள்; இங்கிலாந்தின் சாதனையை முறியடித்தது இந்தியா
நடப்பது டெஸ்ட் கிரிக்கெட்டா இல்லை டி20 போட்டியா என வியக்கும் வகையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. செப்டம்பர் 27 அன்று கான்பூரில் தொடங்கிய இந்த போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், மோசமான வானிலை காரணமாக 35 ஓவர்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று நான்காம் நாளில் மீண்டும் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. நான்காம் நாளில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் வென்றுவிடுவதை நோக்கமாக வைத்துள்ள இந்தியா, முதல் இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகிறது.
குறைந்த பந்துகளில் 50 ரன்கள்
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் முதல் 50 ரன்களை எட்டிய அணி என்ற சாதனை படைத்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இந்தியா தனது முதல் 100 ரன்களை 10.1 ஓவர்களில் எடுத்தது. இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 12.2 ஓவர்களில் 100 ரன்களை எடுத்ததே இந்தியாவின் சாதனையாக இருந்த நிலையில், அதையும் முறியடித்துள்ளது.