Page Loader
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 23, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், நட்சத்திர பேட்டர் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இருவரும் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதற்கிடையே, எதிர்பார்த்தபடி இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுர்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் முதல் முறையாக இந்தியாவின் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புஜாரா அணியில் இருந்து வெளியேறியதால், ஜெய்ஸ்வால் அல்லது கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார்கள்.

india test squad for wi series

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்

இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவில், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் ஷர்மாவே உள்ள நிலையில், அஜிங்க்யா ரஹானே இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். 2021 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கபாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய நவ்தீப் சைனியும் மீண்டும் களமிறங்குகிறார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஜஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத், இஷான் கிஷன், அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.