ஹர்மன்பிரீத், தீப்தி சர்மா அதிரடி சதம்: ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 328 ரன்கள் குவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்துள்ளது. வதோதராவில் உள்ள பி.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா (8) ஆகியோர் முதல் 3 ஓவர்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த போதிலும், பின்னர் வந்த வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடி அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
கேப்டன்
ஹர்மன்பிரீத் - பிரத்திகா நிதானக் கூட்டணி
தொடக்கத்திலேயே 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பிரத்திகா ராவல் இணை 3-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்து மீட்டெடுத்தது.
சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பிரத்திகா 61 ரன்களில் (67 பந்துகள், 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தேஜல் ஹசப்னிஸ் 3 ரன்களில் வெளியேறினார்.
எனினும், ஒருபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது 8-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து, 121 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
புதிய சாதனை
தீப்தி சர்மாவின் வரலாற்று சதம்
ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா, ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஸ்வீப் ஷாட்களை ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார்.
இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிரணிக்கு 5-வது அல்லது அதற்குக் கீழ் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற புதிய சாதனையைப் படைத்தது.
இறுதி ஓவரில் தனது சதத்தை எட்டிய தீப்தி சர்மா, 86 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் 6-வது வரிசையில் களமிறங்கி சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு 329 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.