IND vs IRE 3வது டி20 போட்டி : பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?
ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துடன் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) டப்ளினில் மோதுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணியை மூன்றாவது போட்டியிலும் வீழ்த்தி, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைக்க இந்திய அணி தயாராகி வருகிறது. அதாவது, இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்களில் அதிகமுறை எதிரணியை ஒயிட்வாஷ் செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.
சமநிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள்
இந்தியா 2006இல் தனது முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும், 2016இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தான் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடராக இருந்தது. மேலும், இந்த தொடரில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல்முறையாக 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிரணியை ஒயிட்வாஷ் செய்தது. இதன் பின்னர், இலங்கை (இரண்டு முறை), வெஸ்ட் இண்டீஸ் (மூன்று) மற்றும் நியூசிலாந்து (இரண்டு முறை) ஆகியவற்றை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் இதுபோல் தலா 8 முறை எதிரணிகளை ஒயிட்வாஷ் செய்துள்ள நிலையில், இந்த போட்டியில் இந்தியா வென்றால் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும்.