மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில் வங்கதேச அணியும் மற்றொன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற வேண்டிய மற்றொரு பயிற்சிப் போட்டியானது மழையால் ரத்தானது. இன்று இந்தியா-இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கிடையே இரண்டு பயிற்சிப் போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டர் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார்.
மழையால் தடைப்பட்ட போட்டிகள்:
மேற்கூறிய வகையில் இன்று இரண்டு பயிற்சிப் போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு போட்டிகளுமே மழையால் தடைப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டியானது அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இந்தப் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது திருவனந்தபுறம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில்,தொடர் மழையால் இந்தப் போட்டியும் தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களில், நடைபெறவேண்டிய மூன்று பயிற்சிப் போட்டிகள் மூன்று இடங்களில் மழையால் கைவிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.