டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அஸ்வின் தற்போது டெஸ்டில் தனது 31வது 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இந்தியா மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், அஸ்வின் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரை வெளியேற்றி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக வீழ்த்தினார்.
டெஸ்டில் 31வது ஐந்து விக்கெட்டுகள்
அஸ்வின் தனது 89வது போட்டியில் விளையாடி 457 டெஸ்ட் விக்கெட்களை எட்டியுள்ளார். மேலும் இப்போது ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் (67) முதலிடத்திலும், ஷேன் வார்ன் (37) இரண்டாம் இடத்திலும், ரிச்சர்ட் ஹாட்லீ (36) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் அனில் கும்ப்ளே (35) உள்ள நிலையில், ரங்கனா ஹெராத் (34), ஜேம்ஸ் ஆண்டர்சன் (32) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதற்கடுத்தபடியாக ஏழாவது இடத்தில் அஸ்வின் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 25 சொந்த மண்ணில் எடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.