Loading...
ஜெய்ஸ்வால் அபார சதம்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 464 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா ஏ
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா.

ஜெய்ஸ்வால் அபார சதம்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 464 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா ஏ

எழுதியவர் Vasuki
Nov 08, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 464 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. லிங்கன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்துச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெய்ஸ்வால் 138 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பொறுப்பான ஆட்டம்

மிடில் ஆர்டர் பேட்டர்களின் பொறுப்பான ஆட்டம்

பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 88 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் 95 பந்துகளில் 71 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தேவ்தத் படிக்கல் 15 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இணை பிரிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 81 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

சரிவு

நியூசிலாந்து ஏ அணியின் தொடக்கச சரிவு

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து ஏ அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார்.

அவர் தனது துல்லியமான பந்துவீச்சால் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து ஏ அணி 12.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதன் மூலம் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வலுவான நிலையில் உள்ளது.

ADVERTISEMENT