'தீபக் சாஹர் எப்போதும் பக்குவமடைய மாட்டார்' : எம்எஸ் தோனி கலகல பேச்சு
செய்தி முன்னோட்டம்
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் உட்பட பல இந்திய வீரர்கள் எம்.எஸ் தோனியை ஒரு வழிகாட்டியாக பார்க்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் தங்கள் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் தோனியிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலுக்கு வெளிப்படையாக நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தோனி, 2007 மற்றும் 2018க்கு இடையில் ஏறக்குறைய 11 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததோடு, ஐபிஎல் தொடக்க சீசனான 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
தோனி எப்போதுமே விளையாடும் அரங்கிற்கு வெளியே தனது சக வீரர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நடத்தையை வைத்திருப்பார்.
குறிப்பாக, ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் தோனி, தீபக் சாஹரிடம் வேடிக்கையாக நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
dhoni speech in lgm movie release
தீபக் சாஹருடன் தோனியின் நெருக்கம்
சென்னையில் தனது படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த LGM பட வெளியீட்டு விழாவில் பேசிய எம்எஸ் தோனி தீபக் சாஹருடனான தனது உறவு குறித்து பல விஷயங்களை பேசியதோடு, அவர் இன்னும் பக்குவப்படவில்லை என தெரிவித்தார்.
அதில், "ஆல் ரவுண்டர் தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இல்லை என்றால், அவரை தேடுவோம். அவர் சுற்றி இருந்தால்,அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.
அவர் முதிர்ச்சியடைய அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார். என் வாழ்நாளில், அவர் முதிர்ச்சியடைந்ததை நான் பார்க்க மாட்டேன் என நினைக்கிறேன்." என்று நகைச்சுவையாக கூறினார்.
2023இல் ஐபிஎல் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.