அதிக ரன்கள்; 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைக் குவித்துள்ளது. இந்திய அணி டாப் ஆர்டரின் சொதப்பலால் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரிஷப் பந்துடன் சேர்ந்து அணியை மீட்டார். ஜெய்ஸ்வால் இதில் 118 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். ஜடேஜா 86 ரன்களுடனும், அஸ்வின் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை விபரம்
இந்த போட்டியில் அடித்த அரைசதம் மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் தனது முதல் 10 இன்னிங்ஸ்களில் 750 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்டர் ஆனார். இதற்கு முன்பு 1935இல் வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் ஹெட்லி 747 ரன்களை குவித்திருந்ததே அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. டெஸ்டில் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் பின்வருமாறு: 755* - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) 747 - ஜார்ஜ் ஹெட்லி (வெஸ்ட் இண்டீஸ்) 743 - ஜாவேத் மியாண்டட் (பாகிஸ்தான்) 687 - டேவ் ஹூட்டன் (ஜிம்பாப்வே) 680 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)