பாகிஸ்தான் முத்தரப்பு ஒருநாள் தொடர்: வர்ணனையாளர் குழுவிலிருந்து மைக்கேல் ஆதர்டன், நாசர் உசேன் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னணி வர்ணனையாளர்களான மைக்கேல் ஆதர்டன், நாசர் உசேன் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) புறக்கணித்துள்ளது. முன்னதாக, சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன்களை ஆதர்டன் பேட்டி கண்டதும், பாட்காஸ்ட்டில் பாகிஸ்தான் அரசை இருவரும் விமர்சித்ததும் பெரும் சர்ச்சையானது. இதன் எதிரொலியாகவே அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வக்கார் யூனிஸ், மார்க் புட்சர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட புதிய குழுவை பிசிபி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேர்காணல்
விவாதத்தைக் கிளப்பிய இம்ரான் கான் நேர்காணல்
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் ஆகியோரை மைக்கேல் ஆதர்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காகப் பேட்டி எடுத்திருந்தார்.
அந்த 18 நிமிட நேர்காணலில், "சிறையில் எனது தந்தை தனிமைப்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், அவரைத் திட்டமிட்டு அழிக்க அதிகாரிகள் முயல்வதாகவும்" மகன்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அணி வீரர்கள் போட்டியைப் புறக்கணிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு இம்ரான் கானின் சுவடுகளையே அழிக்கப் பார்ப்பதாக பாட்காஸ்ட் ஒன்றில் ஆதர்டனும் நாசரும் வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.
போட்டி விவரம்
புதிய வர்ணனையாளர் குழு
இந்த அரசியல் ரீதியான மோதலின் எதிரொலியாகவே தற்போதைய முத்தரப்புத் தொடரிலிருந்து இவ்விருவரும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிசிபி அறிவித்துள்ள புதிய பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரங்களான வக்கார் யூனிஸ், ஆமிர் சோஹைல், பாசித் கான், அரூஜ் மும்தாஜ் ஆகியோருடன் இலங்கையின் ரோஷன் அபேசிங்கே மற்றும் இங்கிலாந்தின் மார்க் புட்சர் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
ஜைனப் அப்பாஸ் தொகுப்பாளராகச் செயல்படுகிறார். ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய மைதானங்களில் அக்டோபர் 18 முதல் 31 வரை நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப்போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் அரங்கேற உள்ளது.