துலீப் டிராபியில் சதம் : சுனில் கவாஸ்கர், சச்சினின் சாதனையை சமன் செய்த சேதேஷ்வர் புஜாரா
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த பேட்டர் சேதேஷ்வர் புஜாரா உள்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடியதைத் தொடர்ந்து, புஜாரா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது வாய்ப்பை இழந்தார். இருப்பினும், துலீப் டிராபியில் மத்திய மண்டலத்திற்கு எதிரான போட்டியில் மேற்கு மண்டலத்திற்காக புஜாரா சதம் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் புஜாரா 60 சதங்களை அடித்த இந்திய வீரர் ஆனார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த சேதேஷ்வர் புஜாரா
முதல்தர கிரிக்கெட்டில் தனது 60வது சதத்தை பூர்த்தி செய்த சேதேஷ்வர் புஜாரா 60 முதல் தர சதங்கள் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் ஆனார். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தலா 81 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 68 சதங்களுடன் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் தலா 60 சதங்களுடன் விஜய் ஹசாரே மற்றும் சேதேஷ்வர் புஜாரா உள்ளனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேதேஷ்வர் புஜாராவை நீக்கியதற்கு சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.