சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதை ஐசிசி உறுதிப்படுத்தவிலை என்பதால் இது வெறும் வதந்தியாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான ஆர்வத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக, அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் சுமார் ஒரு தசாப்த காலமாக இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. மேலும், கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் விளையாடவும் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. இதனால் போட்டியை ஹைபிரிட் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபியை துபாய்க்கு மாற்ற திட்டம்
ஆசிய கோப்பை போட்டியைப் போல் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரையும் ஹைபிரிட் முறையில் அல்லது முழுமையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு மாற்றப்படலாம் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. தற்போதைய அறிக்கைகள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில் போட்டியை நடத்தும் முயற்சியில் ஐஸ்லாந்து கிரிக்கெட் அவர்களின் சவாலான வானிலை மற்றும் தரமான கிரிக்கெட் மைதானங்களின் பற்றாக்குறை குறித்து நகைச்சுவையுடன் ஒரு முழு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், "நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்கள் முயற்சியை நாங்கள் இன்று வெளியிட்டுள்ளோம். மேலும் ஐசிசியின் கிரெக் பார்க்லே அதைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளது.