நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். புதன்கிழமை (ஜனவரி 3) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் விராட் கோலி 4 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை எட்டியுள்ளார். இதன் மூலம், மார்ச் 2022க்குப் பிறகு முதல் முறையாக விராட் கோலி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளார். மேலும், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரோஹித் ஷர்மா 10வது இடத்திலிருந்து 14வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஒருவருடமாக கிரிக்கெட் விளையாடாத ரிஷப் பந்த் 12வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையில் மீண்டும் ஜஸ்ப்ரீத் பும்ரா
டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சமீபத்தில் மீண்டும் திரும்பிய ஜஸ்ப்ரீத் பும்ரா ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே, டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இந்திய வீரர்களில் இவர்களுக்கு அடுத்த படியாக அக்சர் படேல் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.