ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 4இல் 3 இந்தியர்கள்
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மிகச்சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை விட 10 புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தை உறுதி செய்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த தொடரின் நான்காவது டெஸ்டின் போது சதமடித்த கோலி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி தற்போது 13 வது இடத்தில் உள்ளார். விபத்தில் சிக்கி ஆட முடியாமல் போன ரிஷப் பந்த் ஒன்பதாவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 10 வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா யாரும் எட்டமுடியாத உயரத்தில் 431 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், மூன்றாம் இடத்தில் வங்கதேசத்தின் ஷாஹிப் அல் ஹாசன் உள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியில் மூன்றாவது அதிகபட்ச ரன் ஸ்கோரராக உருவெடுத்த அக்சர் படேல் பேட்டிங் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 44வது இடத்தைப் பிடித்தார் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கிடையே பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா மற்றும் ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 7 மற்றும் 9வது இடங்களில் உள்ளனர்.