ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர். 925 புள்ளிகளுடன் அபிஷேக் ஷர்மா, டி20 பேட்டிங் தரவரிசையில் உச்சத்தில் உள்ளார். பந்துவீச்சாளர் தரவரிசையில், தனது சுழல் மாறுபாடுகளால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் வருண் சக்ரவர்த்தி, 799 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக உள்ளார். அணியாகவும் இந்தியா டி20 மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
மகளிர் அணி
இந்திய மகளிர் அணியின் தரவரிசை
சமீபத்தில் மகளிர் கிரிக்கெட்டில் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 126 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. வீராங்கனைகளை பொறுத்தவரை முதலிடத்தில் இருந்த ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அதேநேரம் ஜெமிமா ரோட்ரிகஸ் ஒன்பது இடங்கள் முன்னறி 10வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்தியாவின் தீப்தி ஷர்மா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனையும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தீப்தி ஷர்மா ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார்.