ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!
ஐசிசி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆடவர் டி20 அணியை நேற்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 சிறப்பாக செயல்பட்ட, குறிப்பாக ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அசத்திய பல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாவார் என எதிர்பார்க்கப்படும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், ஐசிசியின் சிறந்த டி20 அணியில் இடம் பெற்றுள்ளார்.
சிறந்த ஆடவர் டி20 அணியின் முழுமையான பட்டியல்
ஜோஸ் பட்லர் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரன் மெஷின் கோலி, சூர்யகுமார் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இடம் பெற்றுள்ளனர். மிடில்-ஆர்டரை பொறுத்தவரை கிளென் பிலிப்ஸ் மற்றும் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, சாம் கர்ரன் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ஹாரீஸ் ரவுஃப், ஜோசுவா லிட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு வனிந்து ஹசரங்க சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 லெவன் 2022 : ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் கர்ரன், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ரவுஃப், ஜோசுவா லிட்டில்.