ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முதலிடத்தில் நீடித்த நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் நீடித்த நாட்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக திருத்தி அறிவித்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட தவறான புள்ளிவிவரங்களால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் குவித்த கோலி, மீண்டும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். அப்போது ஐசிசி வெளியிட்ட தகவலில், அவர் 825 நாட்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் தரவை மாற்றியமைத்துள்ள ஐசிசி, கோலி ஒட்டுமொத்தமாக 1,547 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சாதனை
அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்து சாதனை புரிந்த கோலி
இந்தத் திருத்தத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும், உலக அளவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு அடுத்தபடியாக, வரலாற்றில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2013-ஆம் ஆண்டு முதன்முதலாக முதலிடத்தை பிடித்த கோலி, இதுவரை 10 முறை அந்த இடத்தைs தக்கவைத்தும், இழந்தும் மீண்டும் மீட்டுள்ளார். ஐசிசியின் இந்தத் திருத்தம், கோலியின் அபாரமான திறமையை மட்டுமின்றி, பல ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் உலகில் செலுத்தி வரும் ஆதிக்கத்தையும், அவரது நிலைத்தன்மையையும் பறைசாற்றுகிறது.