"ஸ்ட்ரைக் ரேட்டை பெருசா எடுத்துக்காதீங்க" : கே.எல்.ராகுல் அட்வைஸ்
இந்திய அணியின் முக்கிய வீரரான கே.எல்.ராகுல், வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார். கேஎல் ராகுலின் மோசமான ஃபார்ம் குறித்து கடந்த சில வாரங்களாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவரது கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், ராகுல் 25 க்கு மேல் ஒரு போட்டியில் கூட எடுக்காத நிலையில், 12.5 சராசரியாயுடன் 8, 10, 12, 22, 23, 10, 2, 20, 17, மற்றும் 1 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்தார். குறைந்த ஸ்கோர்கள் மற்றும் மோசமான செயல்திறனால், பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் அணியின் கடைசி இரண்டு போட்டிகளில் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஜெர்சி அறிமுக விழாவில் பங்கேற்ற கே.எல்.ராகுல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசனுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், தான் கேப்டனாக உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் (எல்எஸ்ஜி) புதிய ஜெர்சி வெளியீட்டு விழாவில் ராகுல் பேசினார். அப்போது டி20 கிரிக்கெட்டில் ஸ்டிரைக் ரேட்டை தீவிரமாக கருதக் கூடாது என்றும், ஸ்டிரைக்-ரேட் மீது வீரர்கள் ஆவேசமாக இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். டி20 கிரிக்கெட் லீக்கில் 109 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 48.01 சராசரி மற்றும் 136.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,889 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அறிமுக அணியாக களமிறங்கிய எல்எஸ்ஜி அவரை ரூ.17 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.